09 மூன்று அடிப்படைகள் (இரண்டாவது அடிப்படை: இஸ்லாம் என்றால் என்ன? மார்க்கத்தின் நிலைகள் எத்தனை?)
இரண்டாவது அடிப்படை: ஆதாரங்களுடன் இஸ்லாமிய மார்க்கத்தை அறிந்து கொள்வது.
அதுவாவது: தவ்ஹீதின் (ஏகத்துவத்தின்) மூலம் அல்லாஹ்வுக்கு முற்றிலும் பணியும், கட்டுப்பட்டு நடப்பதன் மூலம் அவனுக்கு அவனது கட்டளைகளுக்கு கீழ்ப்படிவதும், ஷிர்க்கை (இணைவைப்பை) விட்டும் அதைச் செய்பவர்களை விட்டும் முற்றிலும் விலகியிருப்பதுமாகும். இஸ்லாம் என்பது மூன்று படித்தரங்களைக் கொண்டது: அவை இஸ்லாம், ஈமான் (இறைநம்பிக்கை), மற்றும் இஹ்ஸான் (நன்மை செய்தல்/நற்கடமை) ஆகும். ஒவ்வொரு படித்தரங்களுக்கும் சில தூண்கள் (அடிப்படைகள்) உள்ளன.
முதல் படித்தரம்: இஸ்லாம். இஸ்லாத்தின் தூண்கள் ஐந்து ஆகும்:
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்றும், முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி கூறுவது, தொழுகையை நிலைநாட்டுவது, ஸகாத் வழங்குவது, ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது, மற்றும் அல்லாஹ்வின் புனிதமிக்க இல்லமாகிய கஃபாவிற்கு ஹஜ் செய்வது ஆகியவையாகும்.
நூலாசிரியர் (அல்லாஹ் அவர் மீது கருணை காட்டுவானாக) இரண்டாவது அடிப்படையை நோக்கிக் கடந்து செல்கிறார்; அது ஒரு அடியான் தனது மார்க்கத்தை அறிந்து கொள்வதாகும். அவர் இஸ்லாத்திற்கான வரைவிலக்கணத்தைக் கூறி ஆரம்பிக்கிறார், அவர் கூறினார்:
"முதல் படித்தரம்: இஸ்லாம். அதுவாவது தவ்ஹீதின் (ஏகத்துவத்தின்) மூலம் அல்லாஹ்வுக்கு முற்றிலும் பணியும், கட்டுப்பட்டு நடப்பதன் மூலம் அவனுக்கு அவனது கட்டளைகளுக்கு கீழ்ப்படிவதும், ஷிர்க்கை விட்டும் அதைச் செய்பவர்களை விட்டும் முற்றிலும் விலகியிருப்பதுமாகும்."
இதுவே இஸ்லாத்தின் வரைவிலக்கணமாகும்; நீ ஒரு அடியான் என்பதால் உனது விவகாரங்கள் அனைத்தையும் கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ்விடம் ஒப்படைப்பதாகும். நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியது போல் அடியான் என்பவன் எஜமானனுக்குப் பணிய வேண்டியது அவசியமாகும்;
அதன்பின்னர் அவர் மார்க்கத்தை மூன்று நிலைகளாகப் பிரிக்கிறார்:
1. இஸ்லாம்
2. ஈமான்
3. இஹ்ஸான்