தவ்ஹீதைப் படிப்பதன் முக்கியத்துவம்
அறிந்துகொள்வீராக, அல்லாஹ் உம்மை அவனது வழிபாட்டின் பால் நேர்வழிப்படுத்துவானாக:
நிச்சயமாக ஹனஃபிய்யா என்பது இப்ராஹீம் (அலை) அவர்களின் மார்க்கமாகும். அது யாதெனில், நீங்கள் அல்லாஹ்வை அவனது மார்க்கத்தை தூய்மையாக்கியவராக (இக்லாஸுடன்) தனித்து வணங்குவதாகும். இதைக் கொண்டே அல்லாஹ் அனைத்து மனிதர்களுக்கும் கட்டளையிட்டுள்ளான், இதற்காகவே அவர்களைப் படைக்கவும் செய்தான்.
அல்லாஹ் தஆலா கூறுகிறான்: "மேலும், ஜின்னையும் மனிதனையும் என்னை வணங்குவதற்கேயன்றி நான் படைக்கவில்லை." (அல்-குர்ஆன் 51:56). (1)
இங்கு 'வணங்குவது' (யஃபுதூன்) என்பதன் பொருள்: "அவனை ஒருமைப்படுத்துவது" (தவ்ஹீதை நிலைநாட்டுவது) ஆகும். (2)
அல்லாஹ் ஏவியவற்றில் மிகப் பெரியது தவ்ஹீத் (இறைவனை ஒருமைப்படுத்துதல்) ஆகும். அதன் பொருள்: வணக்கத்தில் அல்லாஹ்வை மாத்திரம் ஒருமைப்படுத்துவதாகும். (3)
அவன் தடுத்தவற்றில் மிகப் பெரியது ஷிர்க் (இணைவைப்பு) ஆகும். அதன் பொருள்: அல்லாஹ்வுடன் சேர்த்து மற்றவர்களையும் அழைப்பதாகும் (வணங்குவதாகும்).
ஹனஃபிய்யா
• மொழி ரீதியாக: இது 'அல்-ஹனஃப்' என்பதிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் 'சாய்வது அல்லது விலகுவது' என்பதாகும்.
• மார்க்க ரீதியாக: இது இணைவைப்பை (ஷிர்க்கை) விட்டும் விலகி, மனத்தூய்மை ,ஈமான் மற்றும் தவ்ஹீதின் பக்கம் முன்னோக்குகின்ற ஒரு மார்க்கமாகும்.
அல்லாஹ் கூறுகிறான்: "(இப்ராஹீம்) அல்லாஹ்வுக்கு முற்றிலும் கட்டுப்பட்டு, நேர் வழியில் நின்றவராக (ஹனீஃபாக) இருந்தார்..." (அல்-குர்ஆன் 16:120). அதாவது, ஷிர்க்கைப் புறக்கணித்து, அல்லாஹ்வின் பக்கம் முன்னோக்கியவராக இருந்தார். எனவே, 'ஹனீஃப்' என்பவர் எப்போதும் தவ்ஹீதின் பக்கம் மீளக்கூடியவராகவும், ஷிர்க்கை விட்டும் தூர விலகியிருப்பவராகவும் இருப்பார்.
(3) (நூலாசிரியர் சிரியர் - ரஹிமஹுல்லாஹ் - நாம் ஏன் தவ்ஹீதைக் கற்க வேண்டும் என்பதை இங்கு தெளிவுபடுத்துகிறார். இதன் முக்கியத்துவத்தை நாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம்).
தவ்ஹீதின் வரைவிலக்கணம் (முன்னைய முன்னுரையில் நாம் பார்த்தது போன்று):
• மொழி ரீதியாக: இது 'வஹ்ஹத-யுவஹ்ஹிது-தவ்ஹீதன்' என்ற வினைச்சொல்லின் மூலப் பெயராகும் (மஸ்தர்). ஒரு பொருளை 'வஹ்ஹத' என்றால், அதை 'ஒன்றாக ஆக்கினான்' என்று பொருள்.
• மார்க்க ரீதியாக: ரபூபிய்யத் (படைத்து பரிபாலிப்பது), உலூஹிய்யத் (வணக்கம்), மற்றும் அஸ்மாஉ வஸ்-ஸிஃபாத் (திருநாமங்கள் மற்றும் பண்புகள்) ஆகிய அல்லாஹ்வுக்கு மாத்திரம் உரித்தான விடயங்களில் அவனைத் தனித்துவப்படுத்துவதாகும்.
நூலாசிரியர் கூறினார்: (வணங்குவதன் பொருள்: ஒருமைப்படுத்துவதாகும்). இது இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களின் கூற்றாகும். அவர்கள் கூறினார்கள்: "அல்குர்ஆனில் வரக்கூடிய ஒவ்வொரு 'இபாதத்' (வணக்கம்) என்ற வார்த்தையின் பொருளும் 'தவ்ஹீத்' (அல்லாஹ்வை ஒருமைப்படுத்துதல்) என்பதாகும்."
உதாரணமாக:
• "அல்லாஹ்வை வணங்குங்கள்" (அல்குர்ஆன் 4:36) என்பதன் பொருள்: அல்லாஹ்வை ஒருமைப்படுத்துங்கள் (தவ்ஹீதை பேணுங்கள்).
• "மனிதர்களே! உங்களைப் படைத்த உங்களுடைய இறைவனையே வணங்குங்கள்" (அல்குர்ஆன் 2:21) என்பதன் பொருள்: மனிதர்களே! உங்களைப்படைத்த இறைவனை ஒருமைப்படுத்துங்கள்.